Thursday, December 6, 2007

நீ வருவாய்..

பஞ்சனையில் நீயிருக்க
பால்நிலா ஒளிவீச
பாவையுன் பிள்ளைமுகம்
பரவசமாக்குதடி - உனைப்
பார்க்க நெஞ்சம் துடிக்குதடி

உருவம் சிலையாய் இருப்பவளே
உள்ளம் மலராய் மணப்பவளெ
உன் முகத்தை காண்பேனா?
உவகை நானும் கொள்வேனா?

நிதமும் உன்னைத் தேடினேன்
நிலவாய் உன்னைப் பார்க்கின்றேன்
நேரில் என்று வருவாயோ?
நேசம் தந்து காப்பாயோ?
-12.12am
14/8/2002

Monday, December 3, 2007

இவர்கள் காலத்தில்..

தமிழாண்ட மீசையும்
தமிழை ஆண்ட முண்டாசும்
தனக்கே உரித்தான - பாரதியெனும்
தங்கத் தமிழன் காலத்தில் - நான்
தவழாமல் போனேனே - அவன்
தமிழைக் கேளாமல் வீண்தானே..

கன்னித் தமிழென
கவி சொல்லி
காட்சிக்கு மொழியெழுதி
காலமெல்லாம் தமிழெழுதி
கண்ணே கலைமானே
கடைசியாய்ச் சொன்னாயே - அதை
காது குளிரக் கேட்பதற்கு
பிறவாமல் போனேனே..

விவேகச் சிங்கமென்றும்
வீரத் துறவியென்றும்
விண் வியக்க புகழெய்தி
விவேகானந்தராய் வீற்றிருந்த
வீர முனி உன்னிடம்
சீடனாய் இருந்திருக்க - நானும்
இயலாமல் போனேனே..

கடல் கொண்டு
கடாரம் வென்று
கலையுலக தொண்டாய்
கற்கோயில் கொண்டாய்
கடை வீரனாய்க் கூட - உன் படையில்
கடைசியில் நில்லாமல்
இராஜ இராஜ சோழனுனை
காணாமல் போனேனே..

அகிம்சா வழி பரப்பி
ஆயிரம் சுடர்கள் எழுப்பிய
மகாத்மா உனை
மறவாமல் இருப்பேனே - ஆனால்
உப்பெனும் தீயில் கூட - உமக்கு
உதவாமல் போனேனே..

ஈரடி எடுத்து வைத்து
விண் மண் அளந்த
வாமணன் போல்
ஈரடி குறள் கொடுத்து
விண் மண் விளக்கிய
வள்ளுவர் தாமுமக்கு
ஏடெடுத்துக் கொடுப்பதற்குள்
ஏமாந்து போனேனே..

மாவீரன் அலெக்சாண்டரும்
மாமேதை இராமுனுஜரும்
வெண்கலக் குரலோன் பாகதவரும்
வெண்புரவி வந்தியத்தேவனும் - என்
எண்ணம் கவர்ந்த
ஏடுகொள்ளா ஏனையரும்
எப்போது இனி வருவார்??

Monday, November 26, 2007

குழந்தைகள்..

தத்தித் தவழ்ந்து வரும்,
தங்க நிறச் சிற்பமோ?
தாலாட்டு வேண்டுமென்று,
தாரைக் கண்ணீர் வடிக்குமோ?

அமுதம் வேண்டுமென்று,
ஆரவாரம் செய்குமோ?
அம்மா என்றழைத்து,
அன்புள்ளம் காட்டுமோ?

சிக்கனச் சிரிப்பினில்,
சின்னதாய் மயக்குமோ?
சிங்காரச் சேட்டையில்,
சில நேரம் ஆட்டமோ?

வள்ளுவன் குறள்படி,
வாய்மலர்ந்த குரலடி,
வாஞ்சையுடன் வார்த்தெடுத்த,
வானவில் ஓவியமடி..

கரும்புக் கன்னங்கள்,
கடித்திட மழலைகள்,
கள்ளம் கபடமற்ற - இந்த
காவியக் குழந்தைகள்..

நீ மட்டும்..

பாரினிலே பாவையர்கள்
பல்லாயிரம் பார்த்துவிட்டேன்
பால் நிலா நீ மட்டும்
பசுமரத்தாணியாய் என் நெஞ்சில்..

என்ன செய்ய வேண்டும்!!

நாணத்தோடு நட்பாகி,
நட்பென்றால் உறவாகி,
உறவென்றால் உயிராகி,
உயிரென்றால் நீயாகி,
நீயென்றால் நானாக,
என்ன செய்ய வேண்டும்
எனதன்பே?

இக்கண்,
உந்தன் உறவாக நினைக்கும்
இரகசியக் காதலன்.

Monday, September 10, 2007

..

கைக்குள் அடங்கும் சின்ன நிலாக்கள்,
வாய்க்குள் ருசிக்கும் வண்ண நிலாக்கள்,
..
லட்டுகள்..

பாட்டாளி..

தோட்டத்திலே நின்னுட்டோம்,
தொடர்ந்து நாங்க உழைச்சிட்டோம்,
வேர்வை நாங்க சிந்திட்டோம் - உரிமை
வேட்கையோட காத்திட்டோம்..

வசதியின்றி வாழ்ந்திட்டோம்,
வாழ்க்கையோடு போரிட்டோம்,
யாருமே இங்கு உதவுலே,
ஒன்னுமே இன்னும் செய்யுலே..

நாங்க இங்க பாட்டாளி - இப்ப
யாரு எங்க கூட்டாளி,
இனியும் நாங்கள் வாழ்வதா?
இல்லை மடிந்து போவதா?

Wednesday, August 29, 2007

உன்னால்...

பார்த்தபடி நின்றிருந்தேன் - மற்றதை
பாராமல் மறந்திருந்தேன்..
பாவையுன்னைக் கண்டவுடன்
பாரினில் காணவில்லை வேறெதுவும்..

இனிதாக வரவேற்றாய் - பெண்
இலக்கணமாய் வீற்றிருந்தாய்..
மூர்ச்சையாகிப் போயிருப்பேன் - உன்
முந்தானை மோதலிலே..

சிரித்திருந்தாய்
சரிந்திருந்தேன்..

என்னுள் உன்னால் வாட்டம்,
எதனால் இந்த மாற்றம்,
எனக்கே என்னைத் தெரியவில்லை,
எனக்கு உன்னைப் புரியவில்லை...

சின்னக் கவிதை..

என்னை உனக்குள் தொலைத்தேன்
உன்னை எனக்குள் தொலைத்தேன்
உன்னைக் கேட்காமல் - என்
உள்ளம் கேட்காமல்..